மல்லீ என்கிற மல்லீஸ்வரி. இவர் திரைப்பட நடிகை ஆவார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக அவ்வப்போது நம்மிடம் தொடர்பு கொண்டு பேசிவந்தார்.
“நீங்கள் நிறைய பேருக்கு உதவி செய்கிறீர்கள். எனக்கும் ஏழை மக்களுக்கு உதவுவதற்கு ஆசை உள்ளது. என் கையில் பணம் வரும் போது உங்கள் மூலமாக உதவி செய்கிறேன்”
என்பார்.
இவர், நடிகர்கள் செந்தில், கவுண்டமணி முதலானோருடன் நடித்துள்ளார் . இயக்குநர்கள் சுந்தர் சி, பி.வாசு படங்களில் நடித்திருக்கிறார் .
கடந்த சில தினங்களுக்கு முன்பு என்னை தொடர்பு கொண்டு பேசினார்.
மிகவும் உடல் நலம் குன்றியிருந்ததை அவர் குரல் காட்டிக் கொடுத்தது.
நுரையீரல் பாதிக்கப்பட்டு சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் பேசினார்.
“மருத்துவர்கள் என் உயிரைக் காப்பாற்றி விட்டார்கள். என்னை டிஸ்சார்ஜ் செய்ய உள்ளார்கள். ஆனால், வீட்டில் குறைந்தது மூன்று மாதமாவது ஆக்சிஜன் உதவி தேவை. அதற்கு ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்”
என்று தெரிவித்து
உதவி கேட்டார்.

“என் கையில் கொஞ்சம் கூட பணம் இல்லை. நான் வேளச்சேரியில் ஒரு சின்ன அறையில் வசிக்கிறேன். ஆதரிப்பாரும் யாருமில்லை, என்றார் வேதனையின் உச்சத்தில்.!
அவர் நிறைய படத்தில் நடித்து வருமானம் ஈட்டி கொண்டிருந்தபோது
அவரிடம் உதவி பெற்றவர்கள்,
வருமானம் குன்றியதும் படிப்படியாக விலகிப் போய் விட்டதாகவும் சொல்லி
கண்ணீர் வடித்தார்.
ஒரு கட்டத்தில் ஒரு துணிக்கடையில் மாதம் 15,000 ரூ சம்பளத்துக்கு போய் வந்ததாகவும், தற்போது வருமானத்துக்கு அறவே வழியில்லை என்றும் வருந்தினார்.
அவருடைய இத்தகைய நிலைமை நமக்கு மிகவும் வேதனையை கண்டது.
சினிமா ஃபோட்டோகிராபர் விக்ரமும் நம்மிடம் தொடர்பு கொண்டு இந்த சகோதரியின் பரிதாப நிலைமை குறித்து விளக்கினார்.
அவருடைய தேவையை மனிதநேய நண்பர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.
சில நண்பர்கள் நம்மிடம் தொடர்பு கொண்டு,
நிறைய படங்களில் நடித்தவராயிற்றே,
இந்த அளவுக்கா
அவருடைய நிலைமை உள்ளது என்று கேட்டனர்.
தமிழ்நாட்டின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதரின் வரலாற்றை நான் படித்திருக்கிறேன். அவருடைய கடைசி காலம் குறித்து அவர்களிடம் தெரிவித்தேன்.
யாருக்கும் எந்த நிலைமையும் வரலாம்?…
நடிகை மல்லீஸ்வரி நிலமை குறித்து நாம் போட்ட தகவலை
மனிதநேயர் உப்பிலி ரமேஷ் (அன்பு உள்ளங்கள் அறக்கட்டளை) பார்த்து நம்மிடம் தொடர்பு கொண்டார்.
இது போன்ற நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அளிக்கும் ஒரு மிஷின் என்னிடம் உள்ளது, அதை பயன்படுத்தச் சொல்லுங்கள். அவருக்கு தேவை முடிவுற்றதும் என்னிடம் கொடுக்கச் சொல்லுங்கள்,
என்றார்.
சொன்னபடி, முடிச்சூரில் இருந்து ஒரு ஆட்டோவில் அந்த இயந்திரத்தை அனுப்பி வைத்தார்.
எப்படி பயன்படுத்துவது என்பதையும் சொல்லிக் கொடுத்தார். அது தொடர்பாக
மருத்துவர்கள் ஆலோசனையையும் நாம் பெற்றோம்.
இந்த இயந்திரம் கொரோனா காலகட்டத்தில் நன்கு பயன்பட்டிருக்க வேண்டும். இதன் பூரண செயல்பாட்டுக்கு கொஞ்சம் செலவிட வேண்டி இருந்தது.
மல்லீஸ்வரியின் மருத்துவ செலவுக்கு மனிதநேய நண்பர்கள் சிலர் தங்களால் இயன்ற பணத்தை அனுப்பி வைத்திருந்தனர்.
இவ்வாறு சேர்ந்த ரூபாய் 3000 த்தை இந்த செலவுக்காகப் பயன்படுத்திக் கொண்டோம்.
மனிதநேயர் சம்பத் (அசோக் நகர்) சினிமா ஃபோட்டோகிராபர் விக்ரம் ஆகியோருடன் வேளச்சேரியில் மல்லீஸ்வரி வீட்டுக்கு சென்றோம்.அவருக்கு போதுமான ஆக்சிஜன் தொடர்ந்து கிடைக்க ஏற்பாடு செய்தோம்.
ஆக்சிஜன் மெஷின் வழங்கி உதவி செய்த மனிதநேயர் உப்பிலி ரமேஷ்க்கு அவர் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
மனத நேயர் உப்பிலி ரமேஷ்க்கு நம்முடைய உதவும் கைகள் நண்பர்கள் சார்பில் நம்முடைய பாராட்டும் வாழ்த்தும் உரித்தாகுக.!
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.(திருக்குறள் 36)
பொருள்:
பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்து விடாமல்,
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அறம் செய்யுங்கள். அதுதான் ஒருவருக்கு ஏற்படும்
இக்கட்டான காலகட்டத்தில் துணையாக வந்து நிற்கும்.
– புரசை வெங்கடேசன்,
உதவும் கைகள்,
9840914739
11.03.26




