திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா, மேல் வணக்கம் பாடி கிராமத்தைச் சேர்ந்த சரவணன் மகள் ஐந்தாவது வகுப்பு மாணவி ராஜேஸ்வரி என்ற சிறுமியை என்னால் ஒருபோதும் மறக்க இயலாது.
பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த இந்தக் கண்மணிக்கு இரண்டு கால்கள் மட்டுமே செயல்படாத குறை. மற்றபடி பேச்சிலும் செயலிலும் வியக்க வைக்கும் ஆற்றல் உடையவள்.
அவளுடைய அறிவாற்றலைக் கண்டு வியந்து, அக்குழந்தையின் எதிர்காலத்துக்காக ஏதாவது செய்தாக வேண்டுமே என்று முயற்சி செய்த போது, உங்களைப் போன்ற மனிதநேய நண்பர்களின் உதவிகள் வந்து குவிந்தது.
மனிதநேயர் ஸ்ரீராம் ஐயா(உதவும் கைகள்) அந்த சிறுமிக்கு பேட்டரி வீல் சேர் வாங்கிக் கொடுக்க தம் பங்களிப்பாக ரூ.10,000 வழங்கினார். ஊட்டியில் இருந்து கருணை உள்ளம் கொண்ட ஒரு ஆசிரியர் ஐந்தாயிரம் அனுப்பினார். திருப்பூரில் இருந்து மனிதநேயர் ஐந்தாயிரம் அனுப்பினார்.
ஏராளமான நல்ல உள்ளம் கொண்ட மக்கள் ஒரு ரூபாயில் தொடங்கி 500 ரூபாய் வரை, அனுப்பி வைத்தனர்.
இந்தத் தொகையை வைத்து ரூபாய் 61 ஆயிரம் மதிப்பு கொண்ட பேட்டரியில் இயங்கும் வீல் சேர் வாங்கினோம்.

இந்த வீல் சேர் ஒரு தடவை சார்ஜ் செய்தால் 21 கிலோமீட்டர் பயணிக்க கூடியது.
அவளுக்கு அழகிய புத்தாடையும் வாங்கிக் கொண்டோம்.
என்னுடைய ஆருயிர் நண்பர் கோவிந்தராஜ் க்கு கையில் அடிபட்டு, உடல் நலம் தேறிக் கொண்டிருந்தார். வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்.
பேட்டரி கார் தயார் என்று கேள்விப்பட்டவுடன், தன் உடல் நிலையும் பொருட்படுத்தாமல் தன் காரை எடுத்துக் கொண்டு வந்தார்.
உதவிக்கு சமூக ஆர்வலர் புதுப்பேட்டை வெங்கடேஷும் ஓடோடி வந்தார்.
அந்த கிராமம் திருவண்ணாமலையில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது.
எங்கள் வருகையை அறிந்து திருவண்ணாமலை கோயிலுக்கு ராஜேஸ்வரி தன் பெற்றோருடன் வந்து காத்திருந்தாள்.
புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் வைத்து பேட்டரியில் இயங்கும் வீல் சேரை ராஜேஸ்வரியிடம் ஒப்படைத்தோம்.
அப்போது அவள் மகிழ்ச்சி பொங்க கூறியது:
“ஏராளமான ஏழை எளிய மக்களுக்கு உதவக்கூடிய உயர் படிப்பை நான் கண்டிப்பாக படிப்பேன். அதற்கு உதவும் வகையில் இந்த வீல் சேர் இருக்கும்.
இனி நானே யாருடைய துணைக்காகவும் காத்திராமல் பள்ளிக்கூடம் சென்று வருவேன்”
என்றாள்.
அவளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துவிட்டு
விடைபெற்றோம்.
இந்த சிறுமிக்கு நவீன தொழில்நுட்ப அடிப்படையில் செயல்படும் செயற்கை கால்கள்
கிடைத்தால் அவள் வாழ்க்கை ஜொலிக்கும். மனித நேய மருத்துவர் அல்லது நல்ல அறக்கட்டளை நிறுவனம் நினைத்தால் இது சாத்தியப்படும்.ராஜேஸ்வரிக்கு அப்படி ஒரு நல்லது நடைபெற மனசார விரும்புகிறேன், வேண்டுகிறேன்!
💐💐💐💐🙏🙏🙏🙏
-புரசை வெங்கடேசன்
உதவும் கைகள்
9840914739
26.06.25




