ஏராளமான ஏழை எளிய குடும்பத்துக்கு வாழ்வாதாரம் வழங்கியவரும் தொடர்ந்து அன்னதானம் வழங்கி வருபவருமான மனிதநேயர் ஞானபிரகாஷ் ஐயா அவர்களுடன் அண்மையில் பேசிக் கொண்டிருந்தேன்.
அப்போது அவரிடம் வட சென்னை ஸ்டான்லி மருத்துவமனை எதிரில் உள்ள வள்ளலார் மையத்தின் அன்னதான சேவை குறித்து பேசினேன்.
என் மனைவி அடிக்கடி அங்கு சென்று சேவை செய்து வருகிறார் என்று சொன்னவுடன் அவர் பெருமகிழ்ச்சி அடைந்தார்.
ஒரு மதிய வேளையில் அங்கு நடைபெறும் அன்னதானத்திற்கு நான் பொறுப்பேற்றுக்
கொள்கிறேன் என்று சொன்னார். அதற்கான தொகையை நம்மிடம் அனுப்பி வைத்தார்.
என் மனைவி ஜெய் சித்ரா மூலமாக ஆயத்தப் பணிகளை முடித்துவிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மனைவியுடன் புறப்பட்டு சென்றேன்.
வழக்கமாக என் மனைவியை அழைத்துச் சென்று வாசலில் இறக்கிவிட்டு வந்து விடுவேன். அழைத்துச் செல்வதற்காக மீண்டும் போவேன்.

முதல்முறையாக நீண்ட நேரம் அங்கு இருந்து மதியம் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.
பல்வேறு இடங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு- முதியோர் இல்லங்களுக்கு
அன்னதானம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்து நானும் கலந்து கொண்டிருந்தாலும் அந்த மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி மிகவும் வித்தியாசமாக இருந்தது.
ஸ்டான்லி மருத்துவமனை எதிரில் உள்ள வள்ளலார் மையத்தில் நடைபெற்ற அன்னதானத்தைப் பார்த்து மெய்சிலிர்த்து போனேன்.இதுதான் உண்மை.!
ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் நூற்றுக்கு மேற்பட்ட ஏழை எளிய மக்களின் உறவினர்கள் பாத்திரம் சகிதமாக அங்கு வந்து அன்னதானத்தைப் பெற்று சென்றனர்.
உரிய மக்களுக்கு தரமான உணவு வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது.
தினந்தோறும் இப்படி நடைபெறுகிறது என்பதை அறிந்த போது என் மனம் அளவில்லா மகிழ்ச்சி கொண்டது.
வள்ளலார் என்ற மகான் மறைந்து ஆண்டுகள் பல கடந்து விட்டது.
அவர் போட்ட விதைகள் அன்னதான- அட்சய மரமாக உலகம் முழுவதும் வளர்ந்து நிற்கின்றன. அந்த மார்க்கத்தில் உள்ளவர்கள் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் எப்படி சேவை செய்து வருகிறார்கள். இதுவல்லவா மக்கள் தொண்டு? அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த தெய்வீக பணியை பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் என்னுள் இருந்த கொஞ்ச நஞ்ச “ஈகோ” வும் உடம்பிலிருந்து வெளியேறிக் கொண்டிருப்பதை உணர்ந்தேன்.
என் மனைவி எப்பேர்ப்பட்ட தொண்டில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார் என்பதை அத்தருணத்தில் தான் முழுமையாக உணர்ந்தேன்.
இந்த அருமையான நிகழ்ச்சிக்கு மனித நேயர் பாலசுப்பிரமணி ஐயா, என் பால்ய நண்பர் கோவிந்தராஜ், சமூக ஆர்வலர் புதுப்பேட்டை வெங்கடேஷ் ஆகியோரும் வந்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் அரிய வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த
மனித நேயர் ஞானப்பிரகாஷ் ஐயா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டு, அவருடைய அறப்பணிகள் நூறாண்டுகள் தொடர நம்முடைய டைய உதவும் கைகள் நண்பர்கள் சார்பில் வாழ்த்துகிறேன்.
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.(திருக்குறள் 226.அதிகாரம் 23,ஈகை).
வறியவர்களின் பசியை போக்க வேண்டும். அதுதான், பொருள் பெற்ற ஒருவன் பிற்காலத்தில் தனக்காக சேர்த்து வைக்கும் சரியான இடமாகும்.
-புரசை வெங்கடேசன்
உதவும் கைகள்
9840914739
05.06.25




