மாற்றுத் திறனாளி நண்பர் ஜெயவேல்(திருத்தணி) வாயிலாக அந்த ஊரில் வசிக்கும் பெண்மணிக்கு தையல் இயந்திரம் வாங்கிக் கொடுத்து,அந்த வீட்டில் கூடுதல் வருவாய் ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்தோம்.
அப்பெண்மணியின் கணவர் கூலித் தொழிலாளி.இவர்களுக்கு மூளை வளர்ச்சி குன்றிய 2 ஆண் பிள்ளைகள்.இருவருக்கும் வயது முறையே 20,22.
இருவராலும் ஒரு இடத்தில் சில கணங்கள் இருக்க இயலாத “கடவுள் பிள்ளைகள்”.
இந்த குடும்பத்துக்கு உதவிக்கரம் நீட்ட மனித நேய நண்பர்கள் முன்வந்தார்கள். மனித நேய குடும்பத்தினர் இளங்கோ(சிங்கப்பூர் ), நீலாவதி, வினோதினி, ஹாரிஸ் ரூபாய் 15,000 அனுப்பி வைத்தனர்.
மனித நேயர் பாலாஜி (அமெரிக்கா ) ரூபாய் 10,000 அனுப்பி வைத்தனர்.
ரூபாய் 10,20,50,100,500 என்று ஏராளமான நல்ல உள்ளங்கள் பணம் அனுப்பி வைத்திருந்தனர்.
மோட்டார் வைத்த தரமான தையல் இயந்திரம் ஒன்றை வாங்கினோம்.
அதில் உட்கார்ந்து தைய்ப்பதற்கு ஒரு நாற்காலி மற்றும் கத்தரிக்கோல்,நூல்கண்டு உட்பட தையல் தொழிலுக்கு தேவையான A to Z பொருள்கள் அத்தனையும் வாங்கினோம்.
மீதி இருந்த ரூபாய் நாலாயிரம் தொகைக்கு மளிகை சாமான் வாங்கிக் கொண்டு திருத்தணி புறப்பட்டோம்.
வழக்கம் போல பால்ய நண்பர் மனித நேயர் பொறியாளர் கோவிந்தராஜ் தன் காரில் வந்து
துணையாக இருந்தார்.

திடீரென இந்த பொருட்களோடு அந்த வீட்டு வாசலுக்கு போய் இறங்கினோம்.
யார் யாரெல்லாம் உதவினார்கள் என்ற இந்த விவரத்தைத் தெரிவித்தோம்.
அந்த ஏழைத்தாய் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
அந்தப் பிள்ளைகளை அருகில் அழைத்து அவர்கள் வாயில் ஒரு பிஸ்கட் கொடுக்க முயற்சி செய்தேன்.
என்னால் முடியவே இல்லை. இங்கும் அங்குமாக ஓடிக் கொண்டிருந்தார்கள்.
அவர்களின் தாயை நினைத்து பார்த்தேன்…
இந்த ஏழை குடும்பத்துக்கு உதவிக்கரம் நீட்டிய கருணை உள்ளங்களுக்கு நம்முடைய உதவும் கைகள் சார்பில் வாழ்த்துக்கள், பாராட்டுகள்.
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது .(திருக்குறள் 103)
பொருள்:
பயன் கருதாமல் ஒருவர் செய்யும் உதவியின் அளவை
சீர்தூக்கிப் பார்த்தால் அது பெருங்கடலை விடவும் பெரியதாகும்.
– புரசை வெங்கடேசன்
உதவும் கைகள்
9840914739
17.04.25




