மனிதநேய நண்பர் அன்பு சேகர் நம்மிடம் தொடர்பு கொண்டார். பம்மலில் வசிக்கும் பார்வையற்ற தம்பதியர் மற்றும் அவர் மகன் பற்றி நம்மிடம் கூறினார்.
இருவரும் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவரின் பெற்றோர் ஆவர். தந்தையார் எம் ஏ பி எட் முடித்துவிட்டு வெளியூர் செல்லும் ரயில்களில் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் ஏறி இறங்கி தலையணை விற்பனை செய்பவர். தாயார் பிஏ படித்தவர். சென்னையில் ஓடும் உள்ளூர் ரயில்களில் கடலை மிட்டாய், இஞ்சி மொராப்பா விற்பனை செய்கிறார்.
இவர்களுக்கு பார்வை தெரியும் ஒரு மகன் உள்ளான். அவனை பம்மலில் தங்கள் வீட்டு அருகில் உள்ள தனியார் பள்ளியில் படிக்க வைக்கிறார்கள். இந்த ஆண்டு ஆறாம் வகுப்பில் உள்ளான்.
இந்த ஆண்டுக்கான கல்விக் கட்டணம் ரூபாய் 37 ஆயிரத்து 750. இவர்கள் சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த ரூபாய் பத்தாயிரம் செலுத்தி விட்டார்கள்.மீதித் தொகைக்காக உதவி கேட்டார்கள்.
இந்தப் பள்ளிக்கூட நிர்வாகியை நேரில் சந்தித்தோம். அவர்கள் நிலைமையை புரிந்து கொண்டு ரூபாய் 20,000 கட்டுங்கள் போதும் என்று இந்த மாணவருக்காக சலுகை காட்டினார்கள்.
மனிதநேயர் பாலாஜி (அமெரிக்கா) ரூபாய் 10 ஆயிரம் அனுப்பி வைத்தார். இவர் நம் வாயிலாக இது போன்ற நலிவுற்ற குடும்பக் குழந்தைகளுக்கு 2 முறை உதவியவர் ஆவார்.
மனிதநேயர் ராமமூர்த்தி (தி.நகர்) ரூபாய் ஐந்தாயிரம் அனுப்பி வைத்தார்.
பல இடங்களில் வசிக்கும் கருணை உள்ளம் கொண்ட மக்கள் ரூபாய் 10 முதல் தங்களால் இயன்ற தொகையை அனுப்பி வைத்திருந்தனர். அந்தத் தொதை ரூ ஐந்தாயிரம் சேர்ந்தது.

இந்தத் தொகையுடன் அந்தப் பள்ளிக்கூடத்துக்கு பால்ய நண்பர் கோவிந்தராஜ், மனிதநேயர் சம்பத்(அசோக் நகர் ) உடன் சென்று கட்டணத்தைச் செலுத்தினோம்.
அருகில் இருந்த அவர்கள் வீட்டுக்கும் போனோம். அது ரூபாய் 6,000 மாத வாடகை வீடு. கண் பார்வை இல்லாவிட்டாலும் தங்கள் வீட்டை சுத்தமாக வைத்து இருந்தார்கள். நம் வருகையால்,
அவர்கள் அடைந்தத மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
தங்களுக்கு உதவிய மனித நேயர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
அந்த மாணவருக்கும் அவருடைய பெற்றோருக்கும் நம்முடைய உதவும் கைகள் சார்பில் வாழ்த்துக்கள், உதவிக்கரம் நீட்டிய கருணை உள்ளங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.(திருக்குறள் 101)
பொருள் :
தான் ஓர் உதவியும் செய்யாத போது, பிறர் தமக்குச் செய்யும் உதவிக்கு இவ்வுலகத்தையும் வானத்தையும் கொடுப்பினும் ஈடாகாது.
– புரசை வெங்கடேசன்
உதவும் கைகள்
9840914739
26.07.25




