தாம்பரம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து பேசுகிறேன் என்று அப்பெண்மணி கூறினார். மிகவும் நோயுற்று அப்பெண்மணி இருக்கிறார் என்பதை அப்பேச்சு உணர்த்தியதால் உற்று கேட்டேன்.
” எனக்கு வயது 46 ஆகிறது. நன்றாகத்தான் இருந்தேன். சமூக சேவை செய்யும் ஒரு என் ஜி ஓ வில் இணைந்து பணியாற்றிக் கொண்டிருந்தேன். திடீரென முதுகு வலி ஏற்பட்டது, 40 சதவீத தண்டுவடம் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் சொன்னார்கள். படிப்படியாக என் செயல்பாடு குறைந்து இப்போது படுக்கைக்கு வந்து விட்டேன். கஷ்டப்பட்டால் ஓரளவு உட்கார முடிகிறது. என் வயதான தந்தை தான் முடிந்த அளவு என்னை கவனித்துக் கொள்கிறார்..
உங்களுக்குத் தேவைப்படும் உதவியை சொல்லுங்கள் அம்மா என்றேன்.
“இயற்கை உபாதைகள் கழிக்கும் வகையில்,அந்த வசதி கொண்ட ஒரு வீல் சேர் வாங்கி கொடுங்கள்” என்றார்.
அவர் பேச்சைக் கேட்ட பிறகு என்னால் இருப்பு கொள்ள இயலவில்லை. அந்த சகோதரியின் நோயுற்ற குரல் என் காதுகளில் ரிங்காரமிட்டுக் கொண்டிருந்தது. மனிதய நண்பர்களிடம் இந்த தகவலை தெரிவித்தேன். அவருக்கு உதவச் சொல்லி உதவிகள் வந்தன.
கருணை உள்ளம் கொண்ட ஆசிரியர் (ஊட்டி) ரூபாய் 5000,
கோமதி மேடம் (ஆதம்பாக்கம்) ரூ 2000,
ஹேமலதா மேடம் (அண்ணா நகர்) ரூபாய் 1000,
அன்பு ராஜா சார் (உதவும் கைகள்)ரூ 501
மற்றும் ரூ.100 ,200,500 என்று கருணை உள்ளம் கொண்ட சகோதர, சகோதரிகள் அனுப்பி வைத்தனர்.
லதா மேடம் (வளசரவாக்கம்) என்னை போனில் அழைத்து, டைப்பர் உள்ளிட்ட பொருட்களை நான் தருகிறேன் அவற்றை எடுத்துக் கொண்டு அந்த பெண்ணிடம் கொடுத்து விடுங்கள் என்றார்.
அருமை நண்பர் பொறியாளர் கோவிந்தராஜ் வழக்கம் போல தன் காருடன் வந்தார்.
நேரே வளசரவாக்கம் சென்றோம். அந்த அம்மையாருக்கு வயது 65 இருக்கும். என் முகத்துடன் எங்களுக்கு தருவதற்காக டைப்பர் உள்ளிட்ட பொருட்களை பைநிறைய வைத்துக் கொண்டு காத்திருந்தார். அவரிடம் அதைப் பெற்றுக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம்.
தாம்பரம் தாண்டி சுமார் 20 நிமிட பயணத்துக்குப் பிறகு அந்த தனியார் மருத்துவமனைக்குள் நுழைந்தோம். மிகப்பெரிய இடத்தில் அது அமைந்து இருந்தது. பணம் கட்டி பார்ப்பவர்களுக்கு தனிப் பிரிவாகவும் ஏழை எளிய மக்களுக்கு தனி பகுதியாகவும் ஏற்படுத்தி வைத்திருந்தார்கள்.

ஏழை மக்கள் பிரிவில் உள்ள ஓர் அறையில் அந்த பெண்மணி படுத்திருந்தார். அருகில் அவருடைய வயதான தந்தையார் நின்று இருந்தார்.
நோயின் மடியில் அப்பெண் அமர்ந்திருப்பதை பார்த்த மாத்திரத்தில் உணர முடிந்தது.
பல்துறை மருத்துவ நிபுணர்களின் கூட்டு சிகிச்சை அவருக்கு இத்தருணத்தில் தேவை. அவர் வேலை பார்த்த இடத்தில் இருந்து ஓரளவு உதவி கிடைக்கிறது என்பதை தெரிந்து கொண்டோம்.
நாம் கொண்டு சென்ற வீல் சேர் மற்றும் அப்பெண்ணுக்கு மூன்று மாதம் உதவக் கூடிய டைப்பர்,பஞ்சு, டெட்டால் உள்ளிட்ட பொருட்களை ஒப்படைத்தோம்.
நோயினால் ஏற்பட்ட துன்பத்தைத் தாங்கிக் கொண்டிருந்த அந்தக் கடுமையான சூழலில், நம்மை பார்த்ததும் அப்பெண்ணின் முகம் மலர்ந்தது. தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
“கடவுளிடம் வேண்டினேன். சரியான நேரத்தில் உதவி செய்த உங்களுக்கு நன்றி”, என்றார். “கருணை உள்ளம் கொண்ட சகோதர- சகோதரிகள் கொடுத்ததை கொண்டு வந்தோம்” என்றேன். கடவுளின் கருணை உங்கள் அனைவருக்கும் கிடைக்கும் என்றார், கண் கலங்கியபடி.!
நிறைய துன்பங்கள் அவர் மனதில் நிரம்பி இருந்தன. அவற்றை எங்களிடம் தெரிவித்தார். கேட்டுக் கொண்டிருந்தோம்.
நீங்கள் விரைவில் குணம் அடைய வாழ்த்துகிறோம், பிரார்த்திக்கிறோம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து விடை பெற்றோம்.
மிகக்குறுகிய காலத்தில் அப்பெண்மணிக்கு வேண்டிய உதவிகளை செய்த கருணை உள்ளம் நிறைந்த சகோதரிகள் மற்றும் நண்பர்களுக்கு உதவும் கைகள் நண்பர்கள் சார்பில் வாழ்த்துகள், நன்றிகள்!
அன்றுஅறிவாம் என்னாது அறம்செய்க மற்றுஅது
பொன்றும்கால் பொன்றாத் துணை(திருக்குறள் 36)
பொருள்:
பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடாமல் அறம் செய்யுங்கள். அந்த அறம் தான், உடல் நலம் மிகவும் குன்றும் சமயத்தில் பல்வேறு உருவங்களில் வந்து துணை நிற்கும்.
– புரசை வெங்கடேசன்,
உதவும் கைகள்,
9840914739
21.09.25




