பல்லாவரம் அருகே வசிக்கும் முதுகுத்தண்டு நோயாளி சகோதரர் ரமேஷ் (வயது40)க்கு சில மாதங்களுக்கு முன்பு நாம் உதவி செய்தோம். ” என் உடல் நிலை தேறி வருகிறது. முதுகுப் பகுதியுடன் சேர்ந்து செயல்படும் நவீன ஊன்று கோல் வாங்கிக் கொடுத்தால், அதை பயன்படுத்தி வெளியில் வர ஆரம்பித்து விடுவேன்” என்று நம்பிக்கையுடன் கூறினார். மனித நேயர்கள் ஆகிய உங்கள் உதவிகள் அவருக்கு 25 ஆயிரம் மதிப்புள்ள நவீன ஊன்றுகோல் வாங்கி கொடுத்தோம். அவர் அதை பெரு மகிழ்ச்சியுடன் பயன்படுத்தத் தொடங்கினார்.
சில தினங்களுக்கு முன்பு அவர் நம்மிடம் தொடர்பு கொண்டு , புதிய ஊன்றுகோலை பயன்படுத்த தொடங்கிய சில தினங்களில் முதுகுப் பகுதியில் புண்கள் வந்து அவதிப்பட்டு வருகிறேன்”என்று வேதனையுடன் தெரிவித்தார்.
நான் பயன்படுத்தும் கட்டில் பிளைவுட் கட்டில் என்பதால், முதுகு பகுதியில் உள்ள புண்களை ஆற்ற இயலவில்லை. நான் நன்றாக தூங்கி நாட்கள் பல ஆகிவிட்டன. எனக்கு நீர் படுக்கை (water bed)காற்று படுக்கை(Air bed) வாங்கிக் கொடுத்தால் துன்பத்திலிருந்து விரைவில் விடுபட்டு வெளியில் வருவேன்” என்றார்.
அவருடைய கோரிக்கைகளை நண்பர்களிடம் பகிர்ந்தேன்.
பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மனிதநேயர் ரூபாய் ஐந்தாயிரம் அனுப்பி வைத்து, முதுகுத்தண்டு நோயாளியாக இருந்து அந்த துன்பங்களை அனுபவித்தவன் நான், “அவருக்கு வேண்டிய உதவிகளை செய்யுங்கள்” என்றார்.
கருணை உள்ளம் கொண்ட கோமதி மேடம் (மேடவாக்கம்) ரூபாய் 3000 அனுப்பி வைத்தார். “அவர் துன்பத்தைப் போக்க இந்த நிதியை பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்றார்.

நிறைய மனித நேயர்கள் ரூபாய் 20 -ல் தொடங்கி ரூ 500 வரை அனுப்பி வைத்தனர்.
இப்படி சேர்ந்த தொகையை வைத்து,
நீர் படுக்கை -1
காற்றுப் படுக்கை -1
இலவம் பஞ்சு மெத்தை -1
இலவம் பஞ்சு தலையணை -2(உறையுடன்),
ரமேஷ்க்கு வாங்கிக் கொடுத்தோம்.
புண்களால் வேதனைப்பட்டுக் கொண்டிருந்த அவருடைய முகம் மகிழ்ச்சி அடைந்தது.
ரமேஷ் -ஐ நன்கு கவனித்து வரும் அவருடைய பெற்றோரும் உடன் பிறந்த சகோதரியும் உதவி செய்த அனைவருக்கும் தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
நான் பார்த்த முதுகுத்தண்டு நோயாளிகளில் அதிக நம்பிக்கை உடையவர் ரமேஷ் ஆவார். நம்முடைய உதவிகளை பயன்படுத்தி, வெற்றிகரமான மனிதராக சமுதாயத்தில் வலம் வருவார் என்ற நம்பிக்கை உள்ளது.
அந்த நம்பிக்கையுடன் அங்கிருந்து விடை பெற்றோம்.
இக்கட்டான சூழலில் இருந்து அவர் மீள்வதற்கு , உதவிக் கரம் நீட்டிய மனித நேயர்கள் அனைவருக்கும் உதவும் கைகள் நண்பர்கள் சார்பில் வாழ்த்துகள் பாராட்டுக்கள்.!
” காலத்தினால் செய்த நன்றி சிறிதுஎனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது”
(திருக்குறள் 102)
பொருள்;
உரிய காலத்தில் ஒருவருக்கு செய்யப்படும் உதவியின் தன்மையை ஆராய்ந்தால் அது உலகை விட அளவில் பெரியது ஆகும்.
– புரசை வெங்கடேசன்
உதவும் கைகள்
9840914739
05.11.25




